Friday, April 2, 2010

அங்காடி தெரு






தமிழ்சினிமாவில் எப்போதாவதுதான் இதுபோன்ற படங்கள் வரும். புத்தியும் மனசும் ஒரு சேர வலிக்கிற மாதிரி ‘பொளேர்’ என்று அறைந்துவிட்டு போகும்! ரங்கநாதன் தெருவின் கூச்சலும், நெரிசலும் இரண்டரை மணி நேரத்தில் நம்மை விட்டு கடந்து போனாலும், இரண்டொரு நாட்கள் விடாமல் ஒலிக்கிற இரைச்சலில் ஒன்று ‘தாயோளி முண்ட…’

லிங்கமும் கனியும் மட்டுமல்ல, ஒரு சில காட்சிகளில் வந்து போகிற கேரக்டர்கள் கூட, பசுமரத்தாணி போல பஞ்ச் வைத்துவிட்டு போவதுதான் வசந்தபாலனின் ஸ்டைல்!

ரங்கநாதன் தெருவின் அடையாளங்களில் ஒன்றாக கருதப்படும் ஒரு வணிக நிறுவனத்தை குறித்துதான் இயங்குனரின் பார்வை விரிந்திருக்கிறது. லேபர் சட்டங்களை வேஸ்ட் பேப்பர் போல கிழித்தெறியும் அதன் அதிகார பார்வையில், கண்கூசி நெளிகிற எத்தனையோ தொழிலாளர்களின் துயரத்தை சொல்ல, அவர்களை விடவும் கடுமையாக உழைத்திருக்கிறார் வசந்தபாலன். தோழரே, வாழ்க!

நள்ளிரவு. பஸ் ஸ்டாண்டில் கால்களால் உரசிக் கொள்ளும் காதலர்களாக காண்பிக்கப்படுகிறார்கள் மகேஷ§ம், அஞ்சலியும். இறுதியில் அவ்வளவு உற்சாகமாக விளையாடிய கால்கள் இரண்டுமே அஞ்சலிக்கு இல்லை என்று முடிகிறது கதை. இடையில் நடப்பது என்ன? கிராமத்திலிருந்து கொண்டுவரப்படும் இத்தகைய தொழிலாளர்கள் நாள் முழுக்க நின்று கொண்டே வேலை பார்க்கிறார்கள். மதிய உணவுக்காக ஓடோடி செல்லும் அவர்கள் திரும்பி வர தாமதமாகும் ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒரு ரூபாய் கட். அந்த மதிய உணவுக் கூடம் இருக்கிறதே, அதற்கு பன்றிகள் கூடமே பரவாயில்லை. உள்ளே சூப்பர்வைசர்கள் என்று சொல்லப்படும் இரண்டாம் தர முதலாளிகளின் பாலியல் வக்கிரம். கொடூர தண்டனைகள் என்று வசந்தபாலன் கைகாட்டுகிற திசையெல்லாம் மனித உரிமை மீறல்கள்!

உறங்குகிற தொழிலாளர்களுக்கு புரண்டு படுக்க கூட இடமில்லாதளவுக்கு நெரிசல் மிகுந்த வாழ்க்கை. அந்த நேரத்திலும் காவலுக்கு கைத்தடியுடன் ஒரு காவலாளி! இப்படி காட்சிக்கு காட்சி கொத்தி கிழிக்கப்படுகிறது முதலாளித்துவத்தின் முகத்திரை. இங்கேதான் காதல் வளர்க்கிறார்கள் அஞ்சலியும் மகேஷ§ம். அந்த நிறுவனத்தின் எழுதப்படாத விதி, காதல் கூடாது! அதையும் மீறி காதலிக்கும் இருவரும் மாட்டிக் கொள்கிற காட்சியும், அவர்களுக்கு தரப்படும் தண்டனையும் தியேட்டரை ஒரேயடியாக உச் கொட்ட வைக்கிறது.

கழுத்தை பிடித்து வெளியே தள்ளப்படும் இருவரும் புது வாழ்க்கையை துவங்கும்போது மீண்டும் விதியின் கோரத் தாக்குதல். அகோரமான விபத்தொன்றில் கால்களை பறிகொடுக்கிறார் அஞ்சலி. அதன்பின்பும் தொடரும் கதையில் நம்பிக்கை துளிர்த்ததா? முடிவு.

புதுமுகம் மகேஷ§க்கு இது முதல் படம் என்றால் நம்பவா முடிகிறது? கண்ணெதிரே காதலிக்கு தரப்படுகிற தண்டைனையை கண்டு ஆவேசப்படும் அவர், மூர்க்கத்தனமாக சூப்பர்வைசரை தாக்குவது சினிமா ஹீரோயிசம் அல்ல. அடங்கிப் போகிற ஒவ்வொரு சாமானியனுடைய எழுச்சி! கிராமத்தில் ஒரு காதல் இவருக்கு. நகைப்புக்காக என்றாலும் சகிக்கலை சாமி. (கேஸ் ட்ரபுளால் பிரியுதாம் அந்த காதல்)

நடிப்பும், அதற்கு அட்சர பொறுத்தமான டப்பிங்குமாக அசத்தியிருக்கிறார் அஞ்சலி. அவ்வளவு கறாரான நிறுவனத்தில் ரகசியமாக சீட்டு பணம் பிடிக்கும் சாமர்த்தியம் அழகென்றால், குடும்ப சூழலுக்காக தன்னை விட்டு விலகும் மகேஷ் மீது காட்டுகிற கோபமும் அழகு. சூப்பர்வைசர் வெங்கடேஷ் பார்வையில் சிக்கிவிட்டோமே என்று அச்சம் காட்டும் அதே கண்களில் சகலவிதமான உணர்ச்சிகளும் கபடி ஆடிவிட்டு போகிறது. தமிழ்சினிமாவுக்கு மீண்டும் ஒரு அவார்டு நாயகி.

அண்ணாச்சியாக நடித்திருக்கிறார் பழ.கருப்பையா. சில காட்சிகளே வந்தாலும் அந்த மிடுக்குப் பார்வை மிரட்டல். ஒவ்வொரு நாள் கடை திறக்கும்போது நடக்கும் சம்பிரதாயமும், மரியாதைகளும் மக்கள் அறிந்திராத அரிதான காட்சிகளில் ஒன்று. கவனத்தை ஈர்த்த இன்னொருவர் இயக்குனர் ஏ.வெங்கடேஷ். இவர் வருகிற காட்சிகளில் எல்லாம் நம்மையறியாமல் ஒரு நடுக்கமே வந்துவிடுகிறது. இவர் வாயிலிருந்து வந்து விழும் வார்த்தைகளில் பாதி சென்சார் ஆபிசர்களுக்கு புரியாமல் போவதால் தாயோளி முண்டைகளும், கூ… களும் சரளமாக விழ அனுமதித்திருக்கிறார்கள். அந்த கிராமத்து கிழவியின் “அறுத்துபுடுவேன்….” டயலாக்குக்கு தியேட்டரே துவம்சம் ஆகிறது. மகேஷின் நண்பனாக வரும் பிளாக் பாண்டிக்கும் மனசுக்குள் ஒரு தனி இடம் கிடைக்கிறது.

சூப்பர்வைசரின் மிரட்டலுக்கு பயந்து காதலையே கொச்சைப்படுத்துகிற அந்த இன்னொரு தொழிலாளியும் தற்கொலை செய்து கொள்ளும் அந்த காதலியும் கூட மனசை உலுக்கிவிட்டு போகிறார்கள். சினேகாவின் விளம்பர காட்சி இயல்பாக அமைந்தாலும், பின்னணியில் ஒரு பொருத்தமான அர்த்தம் இருப்பதாகவே படுகிறது.

திரும்ப திரும்ப கடைக்குள்ளேயே கேமிரா சுழல்கிறது என்று நினைக்கிற இயக்குனர் மெல்ல அதிலிருந்து வெளியே வருகிறார் மேலும் சில கேரக்டர்களின் உதவியோடு! ஆனால், அங்கேயும் தலைவிரித்தாடுகிறது சோகம். ஹைக்கூ போல முடியவேண்டிய காட்சிகள் கூட, நீளமாக சொல்லப்படுவதால் சற்றே அலுப்பு.

தலா ஒரு பாடலை முணுமுணுக்க வைக்கிறார்கள் இசையமைப்பாளர்களான விஜய் ஆன்ட்டனியும் (அவள் அப்படி ஒன்றும் அழகில்லை), ஜி.வி.பிரகாஷ§ம் (உன் பேரை சொல்லும்போதே). எதையெதையோ செதுக்கிய வசந்தபாலனுக்கு பின்னணி இசையை கன்ட்ரோல் செய்ய முடியாதளவுக்கு என்ன பிரச்சனையோ? கூறு போட்டிருக்கிறார் விஜய் ஆன்ட்டனி.

ரிச்சர்டு எம்.நாதனின் ஒளிப்பதிவில் மெனக்கெடல் தெரிகிறது. ஜெயமோகனின் வசனங்களில் பிராவகமெடுத்து ஓடுகிறது வட்டார பாஷை.

‘எடுத்துக்கோ எடுத்துக்கோ… அண்ணாச்சி கடையில் எடுத்துக்கோ’ என்ற ஸ்லோகனை ‘படம் எடுத்துக்கோ…’ என்று புரிந்திருக்கிறார் வசந்தபாலன். அங்காடிக்குள் பெருச்சாளி புகுவதுதான் வாடிக்கை. ஆனால் ஒரு புலியே புகுந்து புலனாய்ந்திருப்பது ஆச்சர்யம்தான்!

0 comments:

Post a Comment