Thursday, August 26, 2010

என் வாழ்க்கை...

வயல்வெளி பார்த்து
ஓணாண் பிடித்து
ஓடையில் குளித்து
எதிர்வீட்டில் விளையாடி
எப்படியோ படித்த நான்
ஏறிவந்தேன் அயல் நாட்டிற்கு!



சிறு அறையில் குறுகிப் படுத்து
சில மாதம் போர்தொடுத்து
வாங்கிவிட்ட வேலையோடு
வாழுகிறேன் கணிப்பொறியோடு !



சிறிதாய்த் தூங்கி
கனவு தொலைத்து
காலை உணவு மறந்து
கடமை அழைக்க செல்கிறேன்
காசு பார்க்க !

மனசு தொட்டு
வாழும் வாழ்க்கை
மாறிப் போகுமோ ?


மௌசு தொட்டு
வாழும் வாழ்க்கை
பழகிப் போகுமோ ?

வால்பேப்பர் மாற்றியே
வாழ்க்கை
தொலைந்து போகுமோ ?

சொந்த பந்த
உறவுகளெல்லாம்
ஷிப் பைலாய்
சுருங்கிப் போகுமோ?

வாழ்க்கை
தொலைந்து போகுமோ
மொத்தமும்!
புரியாது
புலம்புகிறேன்
நித்தமும்!

தாய் மடியில் தலைவைத்து
நிலவு முகம் நான் ரசித்து
கதைகள் பேசி
கவலைகள் மறந்த காலம்
இனிதான் வருமா ?

இதயம் நனைத்த
இந்த வாழ்வு
இளைய தலைமுறைக்காவது
இனி கிடைக்குமா ?



சொந்த மண்ணில்
சொந்தங்களோடு
சோறு திண்பவன்
யாரடா ?
இருந்தால் அவனே
சொர்க்கம் கண்டவனடா!


தமிழனாய்...

சிலம்பரசன் சேகுவேரா...

Sunday, August 1, 2010

என் இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்!

இன்று உலகம் முழுவதும் ஆகஸ்ட் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

'உடுக்கை இழ‌ந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு' என நட்பிற்கு இலக்கணம் வகுக்கிறார் வள்ளுவர்.

சில உறவுகள் இவ்வுலகில் என்றும் அழியாதவை.அந்த உறவுகள் தான் நண்பர்கள்.

நல்ல நண்பர்களை பெற்றவர்கள் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைவார்கள்.

நமது நண்பர்கள் தான் நமது உண்மையான சொத்துக்கள்.

புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள். பழைய நண்பர்களையும் தொடர்பில் வையுங்கள். புதியவர்கள் வெள்ளி என்றால், பழையவர்கள் தங்கம்.



உன் நண்பர்களைக் காட்டு.. உன்னைப் பற்றிச் சொல்கிறேன்.

ஒரே சிந்தனையுடன் இருக்கும் இரண்டு உடல்கள் தான் நட்பு.

நட்பு நீ நிற்கும் போது உன்னை உற்சாகப்படுத்தி இயக்க வைக்கும், தனிமையை இனிமையாக்கும், தேடும்போது வழிகாட்டியாகும், கவலையை போக்கி சிரிக்க வைக்கும், சந்தோஷத்தில் பா‌ட்டு‌ப் பாடும்.

பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் பகிர்ந்து கொள்ள முடியாத விஷயங்களை நண்பர்களுடன் மட்டுமே பகிர்ந்துகொள்ள முடியும்.

ஆண்-பெண், ஏழை-பணக்காரர் போன்ற வேறுபாடுகளை கடந்தது நட்பு.

கொள்கை, கருத்து, வாழ்நிலை அனைத்தையும் பொருட்படுத்தாத நட்பு, விலங்கிற்கும் மனிதனிற்கும் இடையே கூட வேர் விட்டு செழித்துள்ளது.

முதல் அறிமுகத்தில் புன்னகையாய் மலர்ந்து,புரிந்துணர்வில் வளர்ந்து,துன்பத்தையும் இன்பத்தையும் ஒன்றிணைந்து எதிர்கொண்டதால் வேரூன்றி, பலமாகவும் ஆழமாகவும் உள்ளேயும் வெளியேயும் ஆல மரமாய் வளர்வது நட்பு.




வாழ்வின் நிலைகள் மாறிக்கொண்டே இருந்தாலும் தடம் மாறது உண்மையான நட்பு.

நட்பிற்காகவே தொடரும் இவ்வுலக வாழ்க்கையில் நினைவு தெரிந்த நாட்களில் இருந்து எனது சுக/துக்கங்களில் பங்கெடுத்து என்றும் ஆதரவாய் இருக்கும் அன்பு நட்புகள் மற்றும் வலையுலகில் அறிமுகம் ஆன மிக குறுகிய காலத்தில் உரிமையோடு அன்பாய் நட்பாய் பழகும் அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
`

என் நண்பர்கள் மற்றும்
தோழிகள் அனைவர்களுக்கும்...

என் இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்!