Sunday, September 12, 2010

நடிகர் முரளி-மறக்க முடியாத இதயம்!





நடிகர் முரளி மரணமடைந்தார் என்ற செய்தியை டிவிட்டரில் கேள்விப்பட்டதும் மனம் கனத்து விட்டது.இதயம் படத்தில் அவர் நடித்த காட்சிகள் மனதில் தோன்றி மறைந்தன.அப்படத்தில் அவர் தன் காதலை சொல்ல முடியாமல் தவிக்கும் காட்சிகள் ,நம்மை உச் கொட்ட வைத்து விடும். அட..சீக்கிரம் சொல்லுப்பா என நம்மை கடுப்படித்தாலும் ஒரு சராசரி இளைஞனாக அப்படத்தில் வாழ்ந்து காட்டி இருப்பார்.எனக்கு பிடித்த படம் அது.கல்லூரி மாணவராக நிறைய படங்களில் நடித்தார்.பக்கத்து வீட்டு மாமா போல காட்சி அளிக்க கூடிய திரை உலகில் அனைவரிடமும் நல்ல பெயர் எடுத்த சில நடிகர்களில் இவரும் ஒருவர்.நடிகர் முரளி ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கின்றேன்!!


பாலச்சந்தரின் நாயகன்:

1984ம் ஆண்டு கே.பாலச்சந்தரின் கவிதாலயா தயாரிப்பில், அமீர்ஜான் இயக்கத்தில் வெளியான பூவிலங்கு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகனாக அறிமுகமானவர் முரளி. இவரது தந்தை சித்தலிங்கையா பிரபலமான கன்னடத் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார்.

கே.பாலச்சந்தர் அறிமுகப்படுத்திய வெற்றி நாயகர்கள் வரிசையில் இணைந்த குறிப்பிடத்தக்க நடிகர் முரளி.

முதல் படமே சூப்பர்ஹிட் ஆனதால் வெற்றிப் பட நாயகனாக உருவெடுத்தார். தொடர்ந்து பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்தார். காதல் படங்களுக்குத் தனி இலக்கணம் வகுத்தவை முரளி நடித்த படங்கள்.

பகல் நிலவு, இதயம், அதர்மம், காலமெல்லாம் காதல் வாழ்க, பொற்காலம், வெற்றிக் கொடி கட்டு, சொன்னால்தான் காதலா, இரணியன், சுந்தரா டிராவல்ஸ் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் அவர் நடித்துள்ளார்.

சாதனை படைத்த இதயம்:

முரளியின் நடிப்பில் வெளியான புது வசந்தம், இதயம் ஆகிய படங்களில் மிகப் பெரிய வெற்றி பெற்ற சூப்பர்ஹிட் படங்களாகும். குறிப்பாக புது வசந்தம் தமிழ்த் திரையுலகில் புதிய வரிசைப் படங்களுக்கு இலக்கணம் வகுத்தது. இதயம் திரைப்படத்தில் காதல் சொல்லப்பட்ட விதமும், முரளியின் நடிப்பும் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

தமிழ் உணர்வாளர்:

பாணா காத்தாடி தவிர தனது படங்கள் அனைத்திலும் ஹீரோவாகவே நடித்த பெருமைக்குரியவர் முரளி. முரளியின் தந்தை கன்னடர் என்றாலும், அவரது தாய் ஒரு தமிழ்ப் பெண். இதனால் பிறந்தது பெங்களூர் என்றாலும் சுத்தத் தமிழராக இருந்தவர். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான போராட்டங்களின்போது கன்னட திரையுலகின் எதிர்ப்பையும் மீறி கலந்து கொண்டு தனது உணர்வைப் பதிவு செய்தார்.

அவரது மகன் அதர்வாவை சமீபத்தில் ஹீரோவாக்கி அழகு பார்த்தார் முரளி. அவர் ஹீராவோக நடித்த முதல் படமான பாணா காத்தாடியில் முரளியும் சிறிய ரோலில் நடித்திருந்தார். மகன் நடித்த முதல் படமே முரளியின் கடைசிப் படமாக அமைந்தது திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

0 comments:

Post a Comment